கோலாலம்பூர், மே 5 – சமய வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு தாம் கடத்தப்பட்டதாக இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவி பொய்யான தகவலை தெரிவித்ததை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். வகுப்புக்கு செல்லாமல் வர்த்தக மையம் ஒன்றில் அந்த மாணவி தனியாக சுற்றிக்கொண்டிருந்ததாக கோத்தா கினபாலு போலீஸ் தலைவர் Kassim Muda தெரிவித்தார். திருக்குர்ஆன் ஓதும் வகுப்புக்கு செல்வதை விரும்பாமல் அந்த மாணவி தாம் கடத்தப்பட்டதாக கதை கூறியிருக்கிறார் என போலீஸ் கண்டறிந்ததாக அவர் கூறினார்.
அந்த மாணவி கடத்தப்பட்டதாக அவரது புகைப்படத்துடன் கூடிய அறிக்கையொன்று முகநூலில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது. கோத்தா கினபாலு , Kampung Tanjung Aru Baru வைச் சேர்ந்த அந்த மாணவி கடத்தப்பட்டபோதிலும் வெற்றிகரமாக தப்பியதாக அந்த முகநூல் பயணர் குறிப்பிட்டிருந்தார். அந்த மாணவி பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு இதுபோன்ற தவறை இனி மீண்டும் செய்ய வேண்டாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களில் குறிப்பாக பதின்ம வயதினர்கள் குற்றச்செயல் சம்பந்தப்பட்ட பொய்யான புகார்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதோடு பொய் புகார் செய்வது குற்றத்திற்கு ஒப்பானது என்றும் Kasim Muda சுட்டிக்காட்டினார்.