
கோலாலம்பூர், ஜனவரி-31, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நின்றிருந்த ஆடவர்களை 2 வாகனங்கள் மோதி விட்டு தப்பியோடிய சம்பவம் தொடர்பில், ஐவர் கைதாகியுள்ளனர்.
சிலாங்கூர், பந்திங்கில் கைதான அந்த 5 பேருமே பழையக் குற்றப்பதிவுகளைக் கொண்டவர்கள் என, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Azry Akmar Ayob தெரிவித்தார்.
இந்நிலையில் மேலும் 3 சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்; அவர்களாக சரணடைந்தால் நல்லதென Azry கூறினார்.
10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் கொலை முயற்சியாக அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக அந்தக் கேளிக்கை விடுதிக்குள் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே வெளியில் வரை தொடர்ந்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
சாலையோரமாக ஒரு கும்பல் நின்றிருக்க, அங்கு வேகமாக 2 கார்களில் வந்த மற்றொரு கும்பல் கூட்டத்தினரை மோதியது.
சற்று நேரத்தில் U-turn போட்டு எதிர் திசையில் திரும்பி வந்த அவ்விரு வாகனங்களும், மீண்டும் அவர்களை மோத முயன்றன.
வைரலான அச்சம்பவத்தில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளனர்.