
இஸ்லாமபாத் , ஆக 22 – பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் கேபல் கார் செயல் இழந்ததைத் தொடர்ந்து ஆறு சிறார்கள் உட்பட எண்மர் அதில் சிக்கிக் கொண்டனர். பாகிஸ்தானின் வட பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த கேபல் காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பிவைக்கப்பட்டது. இஸ்லாமபாத்திலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பகுதி வட்டாரமான Battagram மில் பள்ளிக்கு செல்வதற்காக அந்த கேபல் காரில் ஏறிய அந்த சிறார்கள் இன்று காலை ஆறு மணி முதல் சிக்கிக் கொண்டுள்ளனர். அந்த கேபல் காரின் கேபல் அல்லது தந்தி வடம் அறுந்ததால் தரையிலிருந்து 900 அடி உயரத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் நிர்வாக வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அந்த கேபல் காரின் இணைப்பை சரிசெய்யும் முயற்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.