இஸ்லாமாபாத், அக்டோபர்-7 – பிரதமரின் அண்மைய பாகிஸ்தான் பயணத்தின் போது மலேசியச் செய்தியாளர்கள் அங்கு பரபரப்பான சில மணி நேரங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அக்டோபர் 2 முதல் 4 வரை செய்தி சேகரிப்புப் பணி முடிந்து சனிக்கிழமை நாடு திரும்ப கிளம்பிய போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்தும் மாபெரும் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சியில், ஆயுதமேந்திய பாகிஸ்தான் இராணுவமும் போலீசும் முக்கிய நெடுஞ்சாலைகளையும் மற்ற சாலைகளையும் போக்குவரத்துக்கு மூடியதே அப்பிரச்னைக்குக் காரணம்.
வழக்கமாக இஸ்லாமாபாத்தில் நாங்கள் தங்கும் ஹோட்டலிலிருந்து விமான நிலையம் செல்ல 30 நிமிடங்கள் தான் பிடிக்கும்.
ஆனால் இம்முறை, கிராமச் சாலைகள், சிற்றூர் சாலைகள் ஆயவற்றை மாற்றுச் சாலைகளாகப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு, சுமார் 3 மணி நேரங்களுக்குப் பிறகே விமான நிலையம் சென்றடைந்தோம் என மலேசியச் செய்தியாளர்கள் கூறினர்.
விமானம் நிலையத்திற்குப் போகும் வழியில் மழை ஒரு பக்கம், இரவு நேரம் மறுபக்கம்;
போதாக்குறைக்கு கரடு முரடான பாதைகள், மேடு பள்ளங்கள், சுடுகாட்டு பாதைகள் போன்றவற்றை கடந்துச் சென்ற அனுபவத்தை மறக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
எல்லா சவால்களையும் கடந்து குறித்த நேரத்தில் விமான நிலையம் சென்றடைய உதவிய தூதரக அதிகாரிகளுக்கும் வாகனமோட்டிகளும் மலேசியச் செய்தியாளர்கள் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெர்னாமா, ஆ.டி.எம், டி.வி.3, ஆஸ்ட்ரோ அவாணி செய்தியாளர்களும் அடங்குவர்.