
‘பாக் குட் தே’ எப்போது தொடங்கி மலேசிய பாரம்பரிய உணவு வகையாக பட்டியலிடப்பட்டது என, லங்காவி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் சுஹைமி அப்துல்லா, மக்களவையில் இன்று கேள்வி எழுப்பினார்.
மலேசியர்களின் பாரம்பரிய உணவு வகையான, நாசி லெமாக், பாக் குட் தே, லக்சா ஆகியவற்றை நாட்டின் தேசிய உணவாக பிரகடனப்படுத்த, எம்மாதியான நடவடிக்கைகளை சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு மேற்கொண்டுள்ளது என தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ சே கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, அவ்விவகாரம் சர்ச்சையானது.
மலேசியாவின் பாரம்பரிய உணவு பட்டியலில், பாக் குட் தே இடம்பெறவில்லை. அதனால், எப்பொழுது பாக் குட் தே மலேசியாவின் பாரம்பரிய உணவானது. அல்லது பாரம்பரிய உணவு பட்டியலில் அதனை இணைக்க அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளாரா? எனவும் சுஹைமி கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, பாக் குட் தேயின் பூர்வீகம் சிலாங்கூர், கிள்ளான் ஆகும். ஆனால், அண்டை நாடு ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படம், பாக் குட் தேயின் பூர்வீகம் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் இருந்தது. அதனால் தான் அந்த தவறான கண்ணோட்டத்தை மாற்றவும், பாரம்பரிய உணவு வகைகளை பராமரிக்க, தேசிய உணவு கழகம் அமைக்கப்படுமா? எனவும் தாம் வினவியதாக, புவா விளக்கினார்.
இவ்வேளையில், சுஹைமிக்கு பதிலளித்த, சுற்றுலா, கலை, பண்பாட்டு துணை அமைச்சர் கைரூல் பிர்டாவுஸ் அக்பார் கான், அனைத்து மலேசியர்களாலும் உண்ண முடிகின்ற உணவு மட்டுமே, நாட்டின் பாரம்பரிய உணவு பட்டியலில் இணைக்கப்படும் என்றார்.