பாசீர் பூத்தே, நவம்பர்-27, கிளந்தான், பாசீர் பூத்தேவில் வெள்ளமேறிய தனது வீட்டின் இரும்பு வாசல் கதவைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து, பிள்ளையின் கண்முன்னே மெக்கானிக் உயிரிழந்துள்ளார்.
செலிசிங், கம்போங் பானீர் பெலிகோங்கில் (Kampung Banir Belikong) உள்ள வீட்டில் அதிகாலை 4.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் இறந்தவர், 35 வயது Tuan Mohd Zakaria Tuan Ismail என அடையாளம் கூறப்பட்டது.
2 பிள்ளைகளுக்கு தந்தையான அவ்வாடவர், வீட்டுக்குள் நுழைவதற்காக அந்த இரும்பு வாசல் கதவில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்தது.
வலியால் அலறிகொண்டே அவர் சரிந்து விழுவதை வரவேற்பறையின் சோஃபா நாட்காலியில் அமர்ந்திருந்த அவரின் 9 வயது மகன் கண்டு, பாட்டிக்குத் தகவல் கொடுத்துள்ளான்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், சரிந்து விழுந்தவரை, வீட்டுக்கு முன் கரைபுரண்டோடிய வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.
ஆற்றங்கரை அருகே வீடு அமைந்திருப்பதாலும், சம்பவத்தின் போது கனமழையும் வெள்ளமும் சேர்ந்துகொண்டதாலும், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் காலை 6 மணியளவில் வீட்டருக்கே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வீட்டின் இரும்பு வாசல் கதவுக்குப் பின்னால் தான், சலவை இயந்திரத்தின் மின்சார plug இருப்பதால், ஒருவேளை அங்கிருந்து மின்சாரம் பாய்ந்திருக்கலாமென இறந்தவரின் உறவினர் சொன்னார்.