பாசீர் மாஸ், மே-5, கிளந்தான், பாசீர் மாஸில் வீட்டில் அயர்ந்துத் தூங்கிக் கொண்டிருந்த போது வெளியே துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு லாரி ஓட்டுநர் பதறிப் போனார்.
Gelang Mas, Kampung Apa-Apa-வில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அலறியடித்துக் கொண்டு வெளியே வந்துப் பார்த்த 30 வயது அந்நபர், முற்றத்தில் நிறுத்தி வைத்திருந்த Perodua Viva மற்றும் Toyota Hilux நான்கு சக்கர வாகனத்தில் துப்பாக்கிச் சூடு பட்டு கண்ணாடிகள் உடைந்துச் சிதறியிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.
வீட்டின் வெளி சுவர்களிலும் துப்பாக்கிச் சூடு பட்டிருந்தது.
இதையடுத்து, தான் மற்றும் தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக அந்நபர் உடனடியாக போலீசில் புகார் செய்தார்.
நல்ல வேலையாக துப்பாக்கிச் சூட்டில் தங்களின் உயிருக்கு சேதாரம் ஏற்படவில்லை என அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
அவரிடம் இருந்து புகார் கிடைத்திருப்பதை உறுதிச் செய்த பாசீர் மாஸ் போலீஸ், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் அல்லது கும்பலைத் தேடிப் பிடிக்க விசாரணையில் இறங்கியிருப்பதாகக் கூறியது.