சிம்பாங் அம்பாட், ஆகஸ்ட்-6 – பாதுகாக்கப்படும் பறவை வகைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததன் பேரில், பினாங்கு சிம்பாங் அம்பாட், பண்டார் தாசேக் முத்தியாராவில் (Bandar Tasek Mutiara) 42 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.
தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்குத் துறையின் (PERHILITAN) பினாங்குக் கிளை மேற்கொள்ள உளவு நடவடிக்கையின் பலனாக, ஞாயிற்றுக்கிழமையன்று தனது வீட்டில் வைத்தே அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.
அந்த Op Bersepadu Khazanah சோதனையின் போது, அவரிடமிருந்து Rose Ring Parakeet மற்றும் Green Cheeked Conue வகைகளைச் சேர்ந்த 4 பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு, 3 பறவைக் கூண்டுகளும், பறவைகளை வாங்கி விற்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 2 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு பத்தாயிரம் ரிங்கிட் என விலாயா சத்து கடல் மார்க்க போலீஸ் கமாண்டர் ருஸ்லி ச்சி ஆரி (Rusley Chi Ari) தெரிவித்தார்.
அப்பறவைகள் அனைத்தும் தனக்குச் சொந்தமானவை என்பதை விசாரணையில் அந்நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
2010 வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேல் நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவ்வாடவரும், பறிமுதல் செய்யப்பட்ட பறவைகளும், பொருட்களும் பினாங்கு PERHILITAN அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.