
ஈப்போ , மார்ச் 18 – ஜவுளி, பொற்கொல்லர் மற்றும் முடிதிருத்தும் கடைகளில் வேலை செய்வதற்காக, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தற்காலிக (PLKS) வருகை படிப்படியாக நிறுத்தப்படும் என்பதால், அந்த வர்த்தகத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவார்கள் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் எச்சரித்துள்ளார்.
முதல் முறையாக பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அப்போதைய உள்துறை அமைச்சர் முஹிடின் யாசின் இந்த விவகாரத்தில் அசைய மறுத்தபோது இதுதான் நடந்தது என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டினார்.
நான் அப்போது அமைச்சராக இருந்தேன். இந்த விவகாரத்தை நான் வலியுறுத்திய போதிலும், பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை தம்மால் நிருபிக்க முடியும் என குலசேகரன் தெரிவித்தார்.
புதிய உள்துறை அமைச்சரும் பிரதமரும் பல துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை அனுமதி வழங்க முன்வந்துள்ளனர். எனவே, இந்திய வணிகங்களை “தண்டிக்க மாட்டார்கள்” என்று நான் நம்புகிறேன். இந்தியர்களுக்குச் சொந்தமான துறைகள் மட்டும் ஏன் இந்தக் கொள்கையால் குறிவைக்கப்படுகின்றன என்றும் குலசேகரன் வினவினார்.
உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் மற்றும் மனித வள அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான குழுவின் இணைத் தலைவர்களாக உள்ளனர்.
எனவே, அவ்விருவரும் பொதுக்குழுவை உடனடியாகக் கூட்டி, ஜவுளி, பொற்கொல்லர் மற்றும் முடிதிருத்தும் பணிகளில், வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்ற வேண்டும் என்று குலசேகரன் கேட்டுக்கொண்டார்.