
மெக்சிகோ, டிச 31 – மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்படவிருந்த பார்சலில் ( Parcel ) , நான்கு மனித மண்டை ஓடுகள் இருந்தது கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர் விமான நிலைய பணியாளர்கள்.
முன்னதாக, அந்தா பார்சல், X-ray ஊடுகதிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது , அதில் ஏதோ விநோதமான வடிவில் பொருள் இருப்பதைக் கண்டு விமான நிலைய பணியாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
அதையடுத்து,போலீஸ் அதிகாரிகள் மெக்சிகோ க்வெரெட்டாரோ (Queretaro) நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். அந்த பார்சலை சோதனையிட்டதில் அவர்கள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியத் தாளால் சுற்றப்பட்டிருந்த 4 மனித மண்டை ஓடுகளைக் கண்டெடுத்தனர்.
அந்த மண்டை ஓடுகள், மெக்சிகோவின் மிக ஆபத்தான வன்செயல் நிறைந்த பகுதியான அபஸ்டிங்கன் ( Apaztingan) பகுதியிலிருந்து அமெரிக்கா, தென் கரோலினாவில் உள்ள மன்னிங் ( Manning) பகுதிக்கு அனுப்பப் படவிருந்தது.
இவ்வேளையில், அந்த மண்டை ஓடுகள் எப்படி பெறப்பட்டன , மருத்துவ ஆய்வுக்காக அந்த மண்டை ஓடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறதா போன்ற விபரங்கள் தெரியவரவில்லை என மெக்சிகோ போலீஸ் படை தெரிவித்தது.