Latestஉலகம்

வாடகைத் தாய் சேவையை வெளிநாட்டவருக்கும் சட்டப்பூர்வமாக்க தாய்லாந்து இணக்கம்

பாங்கோக், மார்ச் 3 – பிள்ளைகள் இல்லாத தம்பதியரின் கருவை வேறொரு பெண்ணின் கருவில் சுமக்கச் செய்யும் ‘வாடகைத் தாய் சேவை’ விவகாரத்தில் தாய்லாந்து தனது பிடியைத் தளர்த்துகிறது.

அதாவது, அந்நிய நாட்டவர்கள் தாய்லாந்தில் வாடகைத் தாய் சேவையைப் பெறுவதை அனுமதிக்க அந்நாட்டரசு முடிவுச் செய்திருக்கிறது.

வெளிநாட்டு தம்பதிகள், தாய்லாந்து சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு வாடகைத் தாய் சேவையைப் பெறும் வகையில் சட்டம் திருத்தப்படும் என தாய்லாந்து சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி கூறினார்.

அவ்வகையில், தகுதிப் பெற்றவர்கள் பாலின பாகுபாடின்றி, முறையாகத் திருமணம் செய்திருக்க வேண்டும்; அதே சமயம் வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைக்கு, அந்த வெளிநாட்டு தம்பதியரின் சொந்த நாட்டில் எல்லா உரிமையும், பாதுகாப்பும் வழங்கப்படுவதை அவர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

வாடகைத் தாய் சேவைக்கு வரும் விண்ணப்பங்களை, அரசாங்கம் அமைக்கும் செயற்குழு தீர விசாரித்து வடிகட்டும் என்றார் அவர்.

வாடகைத் தாய், in-vitro கருத்தரித்தல், செயற்கைக் கருவூட்டல் ஆகியவற்றில் ஒரு பரந்த ஒழுங்குமுறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, அந்த உத்தேச சட்டத் திருத்தம் இம்மாத இறுதியில் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும்.

அப்பரிந்துரை நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது சட்டமானால், ஒரே பாலின ஜோடி உள்ளிட்ட தாய்லாந்து நாட்டவர்கள் அந்த வாடகைத் தாய் சேவைகளைப் பரவலாக அணுக முடியும்; இதன் மூலம் நாட்டின் மருத்துவ சுற்றுலா துறை மேம்படும் என்றார் அவர்.

பெரும்புள்ளிகளை உட்படுத்திய சர்ச்சைகளால், வர்த்தக நோக்கத்திலான வாடகைத் தாய் சேவைக்கு 2015-ல் தாய்லாந்து அரசாங்கம் தடை விதித்தது.

வெளிநாட்டவரும், சேர்ந்து வாழும் ஒரே பாலினத்தவரும் வாடகைத் தாய் சேவையைப் பெற முடியாது; ஆண்-பெண் தம்பதியர் மட்டுமே வாடகை தாய் சேவையைப் பெறலாம், அதுவும் அவர்களில் ஒருவரேனும் தாய்லாந்து பிரஜையாக இருப்பது கட்டாயம் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

மாறாக, அரசாங்க செயற்குழுவால் கட்டுப்படுத்தப்படும் வாடகைத் தாய் சேவைகள் மட்டுமே இதுநாள் வரை அங்கு அனுமதிக்கப்பட்டு வந்தது.

அதுவும் தாய்லாந்து நாட்டவர்கள், வெளிநாட்டினரைத் திருமணம் செய்து மூன்று வருடங்கள் ஆன தாய்லாந்து பிரஜைகள் மற்றும் குழந்தைப் பெறுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மட்டுமே அச்சேவை என வரையறுக்கப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!