
அம்பாங், மார்ச் 25 – ஆங்கில எழுத்தான G என்ற எழுத்தை தவறாக எழுதியதற்காக கடந்த ஆண்டு பாலர் பள்ளியைச் சேர்ந்த 6 வயது மாணவியின் காதை காயம் அடையும் அளவிற்கு திருகிய குற்றத்திற்காக பாலர் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவருக்கு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தார். தனக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றச்சாட்டை 61 வயதுடைய தலைமை ஆசிரியை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதோடு அதனை செலுத்தத் தவறினால் 20 நாட்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி நுரல்லிஸ்வான் அகமட் சுபிர் ( Nurulizwan Ahmad Zubir ) உத்தரவிட்டார்.
அந்த சிறுமியின் காதை இழுத்து திருகியதால் அச்சிறுமியின் வலது காதின் மென்மையான திசுவில் காயம் ஏற்பட்டதை மருத்துவரும் உறுதிப்படுத்தியுள்ளார் . கடந்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி காலை 11.30 மணியளவில், தாமன் செம்பகாவில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதைத் திருகியதன் மூலம் தனித்து வாழும் தாயான அந்த தலைமையாசிரியை வேண்டுமென்றே சிறுமிக்கு காயம் ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. கூடியபட்சம் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 2,000 ரிங்கிட்வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 323ஆவது பிரிவின் கீழ் அந்த ஆசிரியை மீது குற்றஞ்சாட்டப்பட்டது.