
கோலாலம்பூர், நவ 21 – பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் மலேசியாவின் வலுவான நிலைப்பாட்டினால் பொருளாதாரம் அல்லது அமெரிக்காவின் முதலீடுகளில் பாதிப்பு இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீன நிலையில் நாம் உறுதியாக இருந்தாலும் அமெரிக்காவில் 63.02 பில்லியன் ரிங்கிட் உத்தேச முதலீடுகளை பெறுவதில் மலேசியா வெற்றி பெற்றுள்ளதாக அன்வார் கூறினார். பெரும்பாலும் தொழிற்நுட்ப நிறுவனங்களான Google, Enovix, Microsoft, Tik Tok மற்றும் ஏபெக் மாநாட்டின் மூலம் பொருளாதார முதலீடுகளை பெறுவதில் மலேசியா வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார்.
எங்களது சந்திப்பு மற்றும் அணுக்கமாக நடைபெற்ற கூட்டங்களின் மூலம் நமது வர்த்தக தொடர்பு பாதிக்கப்படவில்லை என்பதை தாம் உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார். அந்த நிறுவனங்கள் மலேசியாவின் நிலையை அறிந்திருப்பதாகவும் அரசாங்கம் வெளியிட்ட பல அறிக்கைகளை அமெரிக்காவிலுள்ள முஸ்லீம் நிறுவனங்களும் வரவேற்றுள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். அதோடு தங்களது தொழில் நடவடிக்கையை மலேசியாவுக்கு மாற்ற விரும்பும் அந்த நிறுவனங்களுக்கு மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான MIDA முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அன்வார் வெளியிட்டார். பிரதமரின் கேள்வி நேரத்தின்போது பக்காத்தான் ஹராப்பான் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹாசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அன்வார் இதனை தெரிவித்தார்.