பாலிக் பூலாவில், செப்டம்பர் 18 – கடந்த வாரம் தொலைபேசிகளைப் பயன்படுத்தி ‘akaun keldai’ எனப்படும் மோசடி வேலைகளுக்கு வாடகைக்கு விடப்படும் வங்கிக் கணக்கு எண்களைச் சேகரித்துப் பதிவு செய்ததாக 16 வயது இளைஞர் உட்பட 3 பேர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டின்படி, ஏழு வெவ்வேறு தொலைபேசிகளைப் பயன்படுத்தி அந்த மோசடி வேலைகளுக்கான வங்கிக் கணக்குகளைச் சேகரித்துப் பதிவு செய்துள்ளனர் இந்த குற்றவாளிகள்.
இந்நிலையில், 3,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் சட்டவிரோத செயலைச் செய்த இம்மூவரையும் விடுவிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், அருகிலுள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி உத்தரவிட்டது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.