
ஜோர்ஜ் டவுன், செப் 8 – சிறார் பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் சம்பவத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அந்த மையத்தை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பினாங்கு தீவிலுள்ள அந்த பராமரிப்பு மையத்தின் தலைவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் தம்மை அணைத்ததோடு உதட்டில் முத்தமிட்டதாக அந்த மையத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் கூறிக்கொண்டார். அடுத்த சில நாட்களுக்குள் அந்த பராமரிப்பு மையத்தை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகப் பினாங்கு சமூக நலத்துறையின் இயக்குனர் சகாரியா தயிப் தெரிவித்தார்.
அந்த மையம் பதிவு செய்யப்படவில்லை. அங்கு எஞ்சியிருக்கும் ஐந்து பிள்ளைகள் மற்றொரு இல்லத்தில் தங்கியிருப்பார்கள் என அவர் கூறினார். இந்த சம்பவம் தெரியவந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது இதர உடன்பிறப்புக்களையும் மற்றொரு இல்லத்தில் சேர்த்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது தமது தாயாருடன் ஜோகூர் பாருவில் இருந்துவருகிறார். பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் கூடுதல் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
தற்போது இந்த விவகாரத்தை போலீஸ் கையாண்டு வருவதாக சகாரியா தயிப் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு முன் அந்த சிறார் பராமரிப்பு மையத்தில் 10 பிள்ளைகள் இருநது வந்தனர். அந்த மையத்தின் சி.சி.டி.வி கருவியில் பதிவாகியுள்ள அச்சம்பவம் தொடர்பில் அரசு சார்பற்ற இயக்கத்தின் சமூக நல பணியாளர் ஒருவர் மே 1ஆம் தேதி இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து மறுநாள் விசாரணைக்காக 40 வயதுடைய ஆடவரை கைது செய்த போலீசார் பின்னர் அவரை போலீஸ் ஜாமினில் விடுதலை செய்தனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அந்த ஆடவர் தொல்லை தந்து வந்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாலிக் புலாவ் ‘OCPD’ மேலதிகாரி காமாருல் ரிசல் ஜெனால் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணை அறிக்கை ஆகஸ்டு 30 ஆம் தேதி DPP அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.