
கோலாலம்பூர், பிப்ரவரி-16 – பாலியல் தொல்லை புகார் காரணமாக பல்கலைக்கழக மருத்துவமனையொன்றின் பகுதி நேர குழந்தைகள் நல ஆலோசகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அனைவரும் நிதானம் காக்க வேண்டும்.
உண்மை விஷயம் தெரியாமல் ஆளாளுக்கு கருத்துக் கூறி நிலைமையை மோசமாக்கக் கூடாது என, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிர் கேட்டுக் கொண்டார்.
அவ்விவகாரம் குறித்து புகார் கிடைத்துள்ளது; முழு விசாரணை நடத்தும் பொறுப்பை அதிகாரத் தரப்பிடமே விட்டு விடுவதாக அவர் சொன்னார்.
அந்த பகுதி நேர மருத்துவ ஆலோசகரை இடை நீக்கம் செய்ததற்காக, அவரின் மேலாளர் மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென, X தளத்தில் வெளியான பதிவு குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
அந்நபர் இடைநீக்கம் தான் செய்யப்பட்டுள்ளார்; ஒரேடியாக பணியிலிருந்து நிறுத்தப்படவில்லை; விசாரணையின் முடிவைப் பொருத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கை அமையும்.
எனவே, எதையும் உறுதிச் செய்துகொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதும் குற்றச்சாட்டை வீசுவதும் கூடாது என டத்தோ ஸ்ரீ சாம்ரி நினைவுறுத்தினார்.