கேரளா, ஆகஸ்ட் 30 – கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து அண்மையக் காலமாகப் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய பல புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதில், மலையாள நடிகர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலையாள நடிகரும், அம்மா சங்கம் எனும் மலையாள திரைப்படக் கலைஞர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளருமான சித்திக் மீது 2016ஆம் ஆண்டு செய்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், திருவனத்தப்புரத்திலுள்ள Mascot விடுதியில் மேற்கொண்ட சோதனையில், சித்திக் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை இருந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளதை விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்களின் பெயர் அந்த விடுதியில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், அங்கு வருவதற்கு முன் திரைப்படம் ஒன்றின் முதற்காட்சிகளையும் பார்த்துச் சென்றதாக அப்படக்குழு உறுதிப்படுத்தியது.
அதன் பிறகு, சினிமா குறித்துக் கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டு தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அந்த நடிகையும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.