
மணிலா, செப்டம்பர் 23 – பயணி ஒருவர் சோதனைக்காக கொடுத்த கைப் பையிலிருந்து திருடிய 300 அமெரிக்க டாலர் அல்லது சுமார் ஆயிரத்து 406 ரிங்கிட் பணத்தைப், பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் வாயில் போட்டு விழுங்க முயலும் காணொளி ஒன்று வைரலாகி, பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
விமான நிலையத்தில், உடல் சோதனையின் போது பயணி ஒருவர் தமது கைப் பையை அங்கிருந்த அந்த அதிகாரியிடம் தந்துள்ளார்.
அவரது பையிலிருந்து பணத்தைத் திருடிய சம்பந்தப்பட்ட அதிகாரி, அதனை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விழுங்க முயல்கிறார்.
எனினும், அந்த காட்சி அங்கிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா வாயிலாக வைரலாகியுள்ளது.
அந்த அதிகாரிக்கு அங்கு பணியில் இருக்கும் மற்றொரு அதிகாரி தண்ணீர் கொடுத்து உதவும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
தனது கைப்பை திறந்திருப்பதைக் கண்டு புகார் செய்யும் சம்பந்தப்பட்ட பயணி, அதிகாரி பிடிபடாமல் இருக்க பதற்றத்துடன் திரும்பி தண்ணீர் குடிப்பதை வைத்து, அவர் தான் தனது பணத்தைத் திருடினார் என்பதை உணர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.