Latestமலேசியா

பிட்காயின் சுரங்க மோசடி: 8.5 மில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்த வீட்டு உரிமையாளர்கள்

கோலாலம்பூர், ஜனவரி-25, தங்களின் அடையாளங்களை வாடகைக்காரர்கள் திருடி சட்டவிரோதமாக பிட்காயின் சுரங்கத்தில் ஈடுபட்டதால், 45 வீட்டு உரிமையாளர்களும் வணிக நடத்துநர்களும் விரத்தியின் உச்சத்தில் உள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பான அந்நடவடிக்கையால் தங்களின் மின்சாரக் கட்டண பாக்கி 8.5 மில்லியன் ரிங்கிட் என்ற நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பதாக அவர்கள் கூறினர்.

TNB நோட்டீஸ் அனுப்பியப் பிறகே இப்படி ஒன்று நடந்திருப்பதாக அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.

இதனால் அவர்களில் பலர் கடுமையான நிதி அழுத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கின்றனர்.

வெள்ளிக் கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தங்களின் மனவேதனைகளையும் ஏமாற்றங்களையும் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அவர்களில் KC Teo எனும் 57 வயது ஆடவர் கூறுகையில், தனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் வெவ்வேறு அடையாளங்களைப் பயன்படுத்தி வாடகைக்கு இருந்துள்ளார்.

இதனால் TNB-க்கு தேவையில்லாமல் தாம் 300,000 ரிங்கிட் கடனாளியாகியிருப்பதாக அவர் வேதனையுடன் சொன்னார்.

கணேசன் என மட்டுமே தம்மை அடையாளம் கூறிக் கொண்ட மற்றோர் ஆடவர், 73,000 ரிங்கிட் மின்சாரக் கட்டண பாக்கியை வைத்திருப்பதாக TNB அழைத்துக் கூறிய போதே, வாடகைக்காரரின் தில்லு முல்லு தமக்குத் தெரிய வந்ததாகக் கூறினார்.

70,000 ரிங்கிட்டை தாம் செலுத்தி விட்டதாகக் கூறியவர், இன்னொருவரின் செயலால் வீணாக தாங்கள் கஷ்டத்தையும் நட்டத்தையும் அனுபவிப்பதாகச் சொன்னார்.

அச்செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ ச்சியான் ச்சுங் (Lee Chean Chung), இந்த பிட்காயின் சுரங்க மோசடியை விசாரிக்க TNB பணிக்குழுவை அமைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரத்தை தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!