ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-29 – பினாங்குத் தீவு கடற்கரைகளுக்கு வளர்ப்புப் பிராணிகளை உடன் கொண்டு வரக்கூடாது என்ற விதிமுறைகள் எதுவுமில்லை.
MBPP எனப்படும் பினாங்குத் தீவின் மாநகர மேயர் ராஜேந்திரன் அந்தோணி அவ்வாறு கூறியுள்ளார்
தஞ்சோங் பூங்கா கடற்கரைக்கு 3 வளர்ப்பு நாய்கள் கொண்டு வரப்பட்டது சமூக ஊடகத்தில் சர்ச்சையானது குறித்து, அவர் கருத்துரைத்தார்.
உரிமையாளர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகளைத் தாராளமாக கடற்கரைகளுக்குச் கூட்டிச் செல்லலாம்.
ஆனால், கயிற்றால் கட்டப்படாமலோ அல்லது உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இல்லாமலோ அவை சுற்றித் திரிந்தால் அப்போது நடவடிக்கை எடுக்கப்படுமென்றார் அவர்.
அதோடு, வளர்ப்புப் பிராணிகள் அசுத்தம் செய்தால் அதனை சுத்தம் செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பு; இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.
தெரு நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதால், அவ்வாறு கடற்கரைகளுக்கு கூட்டி வரப்படும் வளர்ப்புப் பிராணிகளுக்கு MBPP-யின் உரிமம் இருப்பதை உரிமையாளர்கள் உறுதிச் செய்ய வேண்டுமென்றும் ராஜேந்திரன் சொன்னார்.
முனிஸ் என்ற பெயரில் சமூக வலைத்தளவாசி ஒருவர் அந்த தஞ்சோங் பூங்கா நாய்கள் விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
‘நம் கண்களுக்குத் தெரியாத நோய்களை நாய்கள் கொண்டு வரலாமென்பதால்’, கடற்கரைகளுக்கோ அல்லது கடலுக்குள்ளோ அவற்றை அனுமதிக்கக்கூடாது என அவர் பதிவிட்டார்.
தவிர தஞ்சோங் பூங்கா கடற்கரைக்கு அதிகமான முஸ்லீம்கள் வருகைப் புரிவதாகவும் அவர் கூறிக் கொண்டார்.