ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-26 – பாயா தெருபோங் சாலையில் (Paya Terubong Street) கிரேன் விழுந்த சம்பவத்தை, பினாங்கு வசதி உட்கட்டமைப்புக் கழகம் (PIC) உறுதிபடுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பீம் (beam) காங்கிரீட்டுகளை பொருத்துவதற்காக அவற்றை ஏற்றிய போது, crawler crane இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், கிரேனின் நுனிப்பகுதி உடைந்து விழுந்தது.
உடைந்த கிரேன் அருகிலிருந்த கார் நிறுத்துமிடத்தில் விழுந்து 2 கார்கள் சேதமடைந்தன.
சேதமடைந்த கார்களின் உரிமையாளர்கள், சேதத்திற்கான இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள இணங்கியிருப்பதாக PIC கூறியது.
இதையடுத்து, பாதுகாப்புக் கருதி சம்பவ இடத்தின் சுற்றுப் பகுதியை, துணை குத்தகையாளர் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
அச்சம்பவத்தில் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
அது குறித்து அன்றைய நாளே, பினாங்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையிடம் (DOSH) தெரிவிக்கப்பட்டும் விட்டது.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க, தடுப்பு நடவடிக்கைகளும் பாதுகாப்பு அம்சங்களும் உடனடியாக புதுப்பிக்கப்பட்டன.
கிரேன் இயந்திரங்களை மாதா மாதம் பரிசோதனைக்கு உட்படுத்துவதை விடுத்து, இனி வாரா வாரம் பரிசோதனை செய்யவும் முடிவுச் செய்யப்பட்டுள்ளதாக PIC தெரிவித்தது.