
ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 4 – ஒரு மணி நேரம் பெய்த அடை மழையால், பினாங்கு மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
தீவில் அமைந்துள்ள, கொம்தார் கட்டம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், ஜாலான் டிரான்ஸ்பர், ஜாலான் ரங்கூன், ஜாலான் மக்கலிஸ்டர், ஜாலான் அன்சன், ஜாலான் டத்தோ கெரமாட், அயிர் இத்தாம் மற்றும் தஞ்சோங் தோகோங் ஆகியவையும் அந்த திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.
செபராங் பெராய் உத்தாராவிலுள்ள, சில பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, அங்கு பலத்த காற்றுடன் கூடிய அடை மழையால், வீடுகளின் கூரைகள் பறந்தன.
வெள்ள நீர் கணுக்கால் அளவுக்கு உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கொம்தார் சுற்று வட்டாரப் பகுதியில், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் புகைப்படங்களை, அதன் சட்டமன்ற உறுப்பினர் தே லை எங் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில், கொம்தார் கட்டடத்தின் கீழ் மாடியிலிருந்து, மலைப்பாம்பு ஒன்று பிடிபட்ட புகைப்படமும் அடங்கும்.
எனினும், நண்பகல் வாக்கில் வெள்ளம் முற்றாக வடிந்தது.
இந்நிலையில், செபராங் பிராய் உத்தாரா பகுதியில் ஏற்பட்ட புயலால் பத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்தது குறித்து, மாநில தீயணைப்பு மீட்பு படைக்கு அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டதை, அதன் இயக்குனர் சாடோன் மொக்தார் உறுதிப்படுத்தினார்.