
ஜோர்ஜ் டவுன். நவ 17 – கார்களை போதைப் பொருள் கிடங்காக பயன்படுத்தி வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை பினாங்கு போலீசார் முறியடித்தனர். ஜெலுத்தோங் மற்றும் குளுகோரில் போலீசார் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு நடவடிக்கையில் ஐந்து ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு North-East மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிடண்ட் V. சரவணன் தெரிவித்தார்.
போதைப் பொருளை வாங்குவோரிடம் அதனை விநியோகிப்பதற்கு முன் இக்கும்பல் போதைப் பொருள்களை பத்திரப்படுத்தி வைப்பதற்கு கார்களையே கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளதையும் போலீசார் கண்டுப் பிடித்தனர். மெர்சடிஸ் கார் ஒன்றுடன் மூன்று மோட்டார் சைக்கிள்கள், நகைகள் மற்றும் 6,050 ரிங்கிட் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருட்ம 21 மற்றும் 42 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு இவர்கள் அனைவரும் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சரவணன் கூறினார்.