
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-16, பினாங்கு, பாயான் லெப்பாசில் மனநலம் குன்றிய உறவுக்காரப் பெண்ணைக் கற்பழித்த புகாரில், 64 வயது முதியவர் கைதாகியுள்ளார்.
கடந்த வார இறுதியில் 27 வயது அப்பெண்ணைக் கற்பழித்ததை, வேலையில்லா அந்நபர் ஒப்புக் கொண்டதாக, பாராட் டாயா போலீஸ் தலைவர் சசாலீ அடாம் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
அதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக சசாலீ சொன்னார்.
மகள் வீட்டில் இல்லாததால் கவலையில் அப்பெண்ணின் தாய் ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் செய்தார்.
அதே சமயம் மகளைத் தேடி அலைந்தவர், 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உறவினர் வீட்டிலும் விசாரித்தார்.
அங்கு அவ்வாடவர் வெறும் துண்டோடு நின்றிருந்த வேளை, கழிவறையில் தனது மகள் ஆடையின்றி இருந்தது கண்டு அம்மாது அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
பாதிக்கப்பட்ட பெண் தானாகவே வீடு தேடி வந்ததாக, அவ்வாடவர் கூறிக் கொண்டார்.
மன நலம் குன்றியதால் என்ன நடந்தது என்பதை அப்பெண்ணால் விவரிக்க முடியவில்லை; என்ற போதிலும் அப்பெண்ணை சந்தேக நபர் ஏற்கனவே பல முறை கற்பழித்திருக்கலாம் என போலீஸ் சந்தேகிப்பதாக சசாலீ கூறினார்.