
பினாங்கு, நவ 1 – பினாங்கில் 28 தமிழ் பள்ளிகளை மேம்படுத்துவற்கு கூடுதல் மானியம் கோரப்படும் என பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜூ சோமு தெரிவித்துள்ளார். எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட 28 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவற்கு கூடுதல் நிதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். மலேசிய முத்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த இராமதாசர் தமிழ்ப் பள்ளி திறப்பு விழாவும், பெரும் புலவர் இராமதாசரின் 107 ஆவது பிறந்த நாள் விழாவையும் தொடக்கிவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது சுந்தர்ராஜூ இதனை தெரிவித்தார். இந்த தமிழ்ப் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து தம்மிடம் எழுத்துப்பூர்வமான கோரிக்கையை சமர்ப்பிக்கும்படி தலைமையாசிரியை திருமதி பத்ம லோசினியை அவர் கேட்டுக்கொண்டார். அதோடு கூடிய விரைவில் 28 தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் சந்தித்து அவர்கள் பணியாற்றிவரும் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பினாங்கில் ஜாலான் சுங்கை தமிழ்ப் பள்ளியை இராமதாசர் தமிழ்ப் பள்ளி என பெயர் மாற்றம் காண்பதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்ட மலேசிய முத்தமிழ் புலவர் இராமதாசர் மன்றத் தலைவர் செந்துறைக் கவிஞர் நாராயணசாமி பெருமாளுக்கும் சுந்தர்ராஜூ தமது பாராட்டை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய செந்துறைக் கவிஞர் நாராணயசாமி, ஜாலான் சுங்கை தமிழ்ப் பள்ளியின் பெயரை இராமதாசர் தமிழ்ப் பள்ளி என பெயர் மாற்றம் செய்வதற்கு பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் என்றுமே மறக்க முடியாது என தெரிவித்தார். அதோடு பினாங்கில் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பாங்காற்றிய சுவாமி இராமதாசரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநிலத்தில் இயங்கும் உலகப் பாவலர் தமிழன்னை தமிழ்ப்பேரவை மலேசிய முத்தமிழ் புலவர் இராமதாசர் மன்ற தலைவர் செந்துறைக் கவிஞர் நாராயணசாமி அவர்களுக்கு முத்தமிழ் பெரும் புலவர் தவத்திரு இராமதாசர் விருது வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்ச்சியில் சுவாமி இராமதாசரின் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.