Latestமலேசியா

பினாங்குக் கட்டடங்கள் 7 magnitude வரையிலான பூகம்பத்தைத் தாங்கும் சக்திக் கொண்டவை – சௌ கோன் இயோவ்

ஜோர்ஜ்டவுன், மார்ச்-30 – பினாங்கில் உள்ள கட்டடங்கள் மற்றும் பாலங்கள் ரிக்டர் அளவுகோலில் 7 வரை நில நடுக்கங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மாநில முதல் அமைச்சர் சௌ கோன் இயோவ் அதனைத் தெரிவித்தார்.

மியன்மாரை நேற்று முன்தினம் 7.7 ரிக்டர் அளவில் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கம், அண்டை நாடான தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சீனா, இந்தியா வரை நில அதிர்வுகளை ஏற்படுத்தியது.

தீபகற்ப மலேசியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது; குறிப்பாக கொம்தார் வளாகம், ஜோர்ஜ்டவுன், பட்டவொர்த்தில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில் அவை உணரப்பட்டன.

மலேசியா, பூகம்ப மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும், தென்கிழக்காசியாவில் பெரிய நில நடுக்கங்கள் ஏற்படும் போதெல்லாம் பினாங்கிலும் நில அதிர்வுகள் உணரப்படுவது வழக்கமாகும்.

ஆனால் அண்டை நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் போன்றவை பசிஃபிக் நெருப்பு வளையத்தில் இருப்பதால், அங்கு அடிக்கடி பூகம்பமும் எரிமலை வெடிப்பும் ஏற்படுகின்றன.

இவ்வேளையில், மின் நிலையங்கள், அணைகள், கொம்தார் வணிக மையம் மற்றும் அரசாங்க அலுவலகங்களைக் கொண்ட அலுவலக கோபுரம் போன்ற உயரமான கட்டிடங்கள் போன்ற முக்கியமான கட்டிடங்களுக்கு மட்டுமே நில அதிர்வு விளைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக மாநிலத்தின் இரண்டு நகர சபைகளின் மேயர்கள் கூறியுள்ளனர்.

கட்டுமானத் திட்டங்களின் தொடக்கத்திலேயே நில அதிர்வு விளைவுகள் நன்கு பரிசீலிக்கப்படுகின்றன; ஆனால் நில நடுக்கத்தைத் தாங்கும் வடிவமைப்புகளில் குறிப்பிட்ட நிபந்தனைகள் கடுமையாக விதிக்கப்படவில்லை என பினாங்கு தீவு மாநகர மேயர் ஏ. ராஜேந்திரன் கூறினார்.

மாநகர மன்றமும் மலேசிய பொறியாளர்கள் நிறுவனமான IEM-மும் தயாரித்த வழிகாட்டுதல்கள் நில மேம்பாட்டாளர்கள், கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், நில அதிர்வுகளின் போது வளைந்து கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உயரமான கட்டமைப்புகளை விட குறுகிய, அதிக உறுதியானக் கட்டடங்கள் தான் பூகம்ப சேதத்திற்கு அதிகம் ஆளாவதாக IEM ஆய்வின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுவதாக ராஜேந்திரன் கூறினார்.

செபராங் பிறையிலும் பூகம்பத்தைத் தாங்கும் மேம்பாட்டுத் திட்ட வடிவமைப்புகளுக்கு எந்தத் தேவைகளையும் விதிக்கவில்லை என அதன் மேயர் Baderul Amin Hamid தெரிவித்தார்.

அத்தகைய நிபந்தனை கட்டாயமாக்கப்பட்டால், கட்டுமானச் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்றார் அவர்.

மியன்மார்-தாய்லாந்து நில நடுக்கங்களில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் பலியாகி 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!