
பிறை, ஏப்ரல்-14, பினாங்கு மாநில வரலாற்றில் முதன் முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான திடல் தடப் போட்டி சனிக்கிழமையன்று கோலாகலமாக நடந்தேறியது.
அதுவும் பிரசித்திப் பெற்ற பத்து காவான் விளையாட்டரங்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து 28 தமிழ்ப் பள்ளிகளும் இதில் பங்கேற்றன.
வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ அப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
அவர் தமதுரையில், எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு பெரிதாக தமிழ்ப்பள்ளிகளின் விளையாட்டுப் போட்டி நடந்திருக்குமா என தெரியவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.
இது தனது நீண்ட நாள் கனவு எனக் கூறிய அவர், ஒருவழியாக அது நிறைவேறியது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோரது ஒத்துழைப்பில் அப்போட்டி வெற்றிகரமாக நடந்தேறியிருப்பது குறித்தும் சுந்தரராஜூ மனநிறைவு தெரிவித்தார்.
போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனுக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.
இவ்வாண்டு மகத்தான வரவேற்புக் கிடைத்துள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்தத் திடல் தட விளையாட்டுப் போட்டிகள் தொடரப்படும் என்றார் அவர்.
திடல் தடப்போட்டி நடைபெற்ற அரங்கம் மட்டும் பெரிதல்ல; அது நடத்தப்பட்ட நேர்த்தியும் தான்.
மற்ற பெரிய விளையாட்டுப் போட்டிகளைப் போல தொடக்க விழாவில் தீபமேற்றியது, போட்டியாளர்கள் அணிவகுத்துச் சென்றது என போன்றவற்றைப் பார்த்து, தமிழ்ப்பள்ளி பெற்றோர்களும் பொது மக்களும் அசந்துபோயினர்.