
பினாங்கு, ஏப் 8 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் செபெராங் பிறை, சுங்கை டுவாவிலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் பக்தர்கள் சங்கத்திற்கும் , செபெராங் ஜெயாவிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலயத்தின் பக்தர்கள் சங்கத்திற்கும் 5,000 ரிங்கிட் காசோலையை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஒப்படைத்தார்.
ஆலய நிர்வாகங்கள் மேற்கொள்ளும் சமய மற்றும் சமூக நல நடவடிக்கைக்கான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நீடித்த ஆதரவை தொடரும் வகையில் இந்த நிதியுதவி அமைந்துள்ளது. இதன் வழி அந்த இரு ஆலயங்களின் பக்தர்கள் சங்கம் எதிர்நோக்கிய நிதிச்சுமை குறையும் என்பதோடு பக்தர்கள் சங்கங்கள் ஏற்பாடு செய்யும் சமய நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் பினாங்கு மாநிலத்திலுள்ள இந்து சமூகத்தினரின் சமூக நலன் மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதில் இந்து அறப்பணி வாரியம் தனது கடப்பாட்டை தொடரும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே பகான் டாலாம் சட்டமன்ற தொகுதியிலுள்ள வசதி குறைந்த அல்லது B40 குடும்பங்களைச் சேர்ந்த பள்ளிப் பிள்கைளுக்கு கண் கண்ணாடிகளை பெறுவதற்கு உதவித் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
ஆரோக்கியமான பார்வை தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சமூக உதவி நடவடிக்கையில் 45 பள்ளிப் பிள்ளைகள் கண் கண்ணாடி உதவித் தொகைக்கான வவுச்சர்களை பெற்றுக்கொண்டனர்.
முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கை மற்றும் கண் பார்வை பரிசோதனையை தொடர்ந்து இந்த உதவித் திட்டத்திற்காக பள்ளிப் பிள்ளைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியிலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு மக்களுக்கான பல்வேறு சமூக நல உதவிகளை பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதி சேவை மையம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் என குமரன் தெரிவித்தார்.