
பினாங்கிலுள்ள உணவகங்களில், அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றால், கட்டாயம் பானம் வாங்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் வற்புறுத்துவது ஏன்? என சுற்றுப் பயணி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பானம் வாங்க வேண்டும் என உணவகங்கள் வற்புறுத்துவது ஏன்? இல்லையென்றால், நான் உட்கார்ந்து சாப்பிட கட்டணம் செலுத்த வேண்டுமா? என @Isuckatmathsbro எனும் அந்த சுற்றுப்பயணி தமது Reddit சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், அதுபோன்ற நடைமுறை பினாங்கில் வழக்கமானதே என, மற்றொரு பயனர் ஒருவர் அந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார்.
“சமீபகாலமாக, வாடிக்கையாளர்களை பானம் வாங்கும்படி வற்புறுத்தும் வழக்கம் பினாங்கில் போர்போனது. நீங்கள் அவர்களிடமிருந்து வாங்கும் பானம் வாயிலாக மட்டுமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் வாங்கவில்லை என்றால் அவர்களால் லாபம் ஈட்ட முடியாது” என அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அது போன்ற வழக்கம், கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட மற்ற பகுதிகளில் இல்லை எனவும், அந்நிய சுற்றுப்பயணிகள் மட்டுமல்ல உள்நாட்டவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல எனவும் சில பயனர்கள் அந்த பதிவிற்கு கீழ் குறிப்பிட்டுள்ளனர்.
அதே சமயம், சீனி இல்லாத பானம் தான் வேண்டும் என்றால், நீங்கள் ‘கோப்பி கோலோங்’ அல்லது ‘C கோலோங்’ பானத்தை அருந்தலாம் எனவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.