ஜியோர்ஜ்டவுன், ஜூலை-1 – பினாங்கு பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள குட்டித் தீவான கசூம்போ (Gazumbo) தீவில் குப்பைகள் மட்டும் கொட்டப்படுவதில்லை; நாய்களும் தான்….
அப்படி அங்கு கைவிடப்பட்ட 12 நாய்கள், திக்கற்று அலைவது பொது மக்கள் குறிப்பாக விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த 12 நாய்களையும் மீட்கும் பணிகளை மாநகர மன்றம் முடுக்கி விட்டுள்ளது.
நேற்று கூட, பினாங்கு மாநகர மன்ற (MBPP) உறுப்பினர்கள் சிலரும் 100 தன்னார்வலர்களும், ‘நிலைத்தன்மை மற்றும் விலங்கு காதலர்கள்’ என்ற திட்டத்தின் கீழ் அத்தீவில் குப்பைகளை சேகரிக்கும் இரண்டரை மணி நேர திட்டத்தின் ஒரு பகுதியாக நாய்களை மீட்பதற்காகச் சென்றனர்.
அவை முரண்டு பிடித்ததால் துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பிடிக்க முடியவில்லை;
இதனால், வெறும் ஒரு டன் குப்பைகளுடனேயே அவர்கள் திரும்ப வேண்டியதாயிற்று.
என்றாலும், நாய்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறிய MBPP உறுப்பினர் குவா பூன் லிம் (Quah Boon Lim), நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகச் சொன்னார்.