கோலாலம்பூர், மே 8- வாழ்க்கை செலவின உயர்வின் காரணமாக கோலாலம்பூர் கூட்டரசு தலைநகரில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் மூன்று வேளைக்கும் குறைவான உணவுகளையே உட்கொள்கின்றனர்.
கோவிட் தொற்று காலத்திற்கு பின் உணவு விலைகள் அதிகரித்தைத் தொடர்ந்து குறிப்பாக PPR அடுக்கு மாடி வீடுகளில் குடியிருப்போர் இந்த நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். கோவிட் தொற்றுக்கு முன்பு 45 விழுக்காடு குழந்தைகள் மூன்று வேளைக்கும் குறைவான உணவை உட்கொண்டனர். இந்த எண்ணிக்கை தற்போது 52 விழுக்காடு உயர்ந்திருப்பதாக கோலாலம்பூரில் வசதிக் குறைந்த குடும்பங்கள் வசிக்கும் 16 அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மாதந்தோறும் 3,000 ரிங்கிட்டிற்கும் குறைந்த குடும்ப வருமானம் பெறுவோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாழ்க்கை செலவின உயர்வை இந்த குடும்பங்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மூன்று முறையும் 2021 ஆம் ஆண்டில் மூன்று முறையும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை மலேசியாவிற்கான ஐ.நா குந்தைகள் நிதி நிறுவனம் மற்றும் ஐ.நா மக்கள் தொகை நிறுவனம் வெளியிட்டன. கோவிட்டிற்கு பிறகு வருமானம் மீண்டு வந்தபோதிலும் கோலாலம்பூரில் பி.பி.ஆர் வீடுகளில் குடியிருக்கும் குடுமபத்தினரின் வறுமை நிலை தொடர்ந்து 41 விழுக்காடாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டது.