
செராஸ், மார்ச் 8 – இரு முறை தனது பிள்ளைகள், தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மின் தூக்கியினுள் சிக்கிக் கொண்டு பாதிக்கப்பட்டதோடு, புகார் அளித்தும் இதுவரை அதன் தொடர்பில் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து , ஜோனதன் வேலா என்பவர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
அந்த இரு சம்பவங்களால், வயது குறைந்த தனது பிள்ளைகள் மன அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜோனதன் வேலா தனது குடும்பத்தாரோடு, செராஸ்-சிலுள்ள M Vertica KL City Residen குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இம்மாதம் மார்ச் 6- ஆம் தேதி , அக்குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து மின் தூக்கியை எடுத்தபோது, தனது மைத்துனியும், 14 வயதிலிருந்து 7 மாதம் வரையிலான தனது குழந்தைகளும், உறவுக்கார பிள்ளைகளும் அதற்குள் சிக்கிக் கொண்டதாக அவர் கூறினார்.
Intercom உதவி கேட்டு யாரும் வராததை அடுத்து , பின்னர் ஐந்தாவது மாடியில் சிக்கிக் கொண்ட மின் தூக்கியினுள் இருந்து சொந்தமாகவே கதவைத் திறந்து அவர்கள் தப்பித்து வெளியே வந்ததாக ஜோனதன் தெரிவித்தார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாக ஜோனதன் தெரிவித்தார். அந்த மின் தூக்கி, குடியிருப்பாளர்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிச் செய்ய தவறிய மேம்பாட்டாளார் மீதும், உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பாதுகாவலர் தரப்பின் மீதும் தாம் புகார் கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.