
கோலாலம்பூர், ஜன 21 – சாலையில் மிகவும் ஆபத்தாகவும் மற்றொரு காருக்கான வழியை தடுக்கும் வகையில் செயல்பட்ட 14 வினாடிகளைக் கொண்ட காணொளியில் காணப்படும் Proton Iriz கார் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனர் எங்கிருந்தாலும் உடனடியாக அருகேயுள்ள போலீஸ் நிலையத்திற்கு செல்லும்படி போக்குவரத்து அமலாக்க குற்றப்புலனாய்வுத்துறை தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த காரின் பதிவு எண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளது .
அந்த கார் ஓட்டுனர் சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கு ஆபத்தாக காரை ஒட்டிச் சென்ற காணொளியை இதற்கு முன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதல்வி Nurul llham Anwar தமது டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார். தமது இரண்டு வயது மகனை ஏற்றிக்கொண்டு காரில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக செல்லும் சாலைத் தடத்தில் பலமுறை அந்த கார் ஓட்டுனர் வேண்டுமென்றே பிரேக் வைத்து முரட்டுத்தனமாக செயல்பட்டு தமது காருக்கு வழிவிட மறுத்தது குறித்தும் அந்த காணொளியில் Nurul பதிவிட்டிருந்தார்.