கோலாலம்பூர், நவம்பர்-22, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது, அவரின் புதல்வி நூருல் இசாவும் உடன் சென்றது, யார் பணத்தில் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு சாரா அமைப்பு சார்பாக அப்பயணங்களில் இணைந்த நூருல் இசாவின் செலவை ஏற்றுக் கொண்டது அரசாங்கமா அல்லது வேறு யாரேனுமா என, மாச்சாங் MP வான் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் (Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal) கேட்டார்.
SERI என சுருக்கமாக அழைக்கப்படும் சமூகப் பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு சார்பில் நூருல் இசா பிரதமருடன் சென்றுள்ளார்.
PSC எனப்படும் நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுக்களுக்கே மிகக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவருக்கு சிறப்புரிமையா? இது தான் அரசாங்கம் சொல்லும் சீரிய நிர்வாகமா ஏன வான் ஃபைசால் கேட்டார்.
நவம்பர் 9 தொடங்கி அன்வார் எகிப்து, சவூதி ரேபியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டார்.
அவற்றில் சில நிகழ்ச்சிகளில் நூருல் இசாவும் பங்கேற்றார்; அவை SERI சார்பில் மேற்கொண்ட அலுவல் பயணங்கள் என தனது சமூக ஊடகங்களிலும் இசா குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, அன்வாரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான 70 முதல் 80 விழுக்காட்டு செலவுகளை, அதே பயணங்களில் பங்கெடுத்த தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
PKR எதிர்கட்சியாக இருந்த போது, அப்போதையப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வெளிநாட்டு அலுவல் பயணங்கள் குறித்து, அவ்வப்போது அது கேள்வி எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.