புது டெல்லி, ஆகஸ்ட் -20, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2 நாள் அலுவல் பயணமாக இந்தியா சென்றடைந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் என்ற வகையில் அவர் இந்தியா செல்வது இதுவே முதன்முறையாகும்.
பிரதமரின் குழுவில் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாக ம.இகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், அமைச்சர்கள், கோபின் சிங் உட்பட வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான அப்பயணத்தின் முக்கிய அம்சமாக புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அன்வார் சந்தித்து பேசுகிறார்.
அதன் போது ஆள்பலம், சுற்றுலா, சுகாதாரம், ஆயுர்வேதம் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கி 7 முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
2 நாள் அப்பயணத்தில் இந்திய – மலேசிய குழுக்களின் சந்திப்பின் போது விக்னேஸ்வரன் நாட்டின் மேம்பாட்டு அம்சங்கள் மற்றும் மலேசிய இந்திய சமூகம் தொடர்பான ஆக்ககர கருத்துகளை பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதராகப் பணியாற்றிய அனுபவமிருப்பதால், விக்னேஸ்வரனுக்கு பிரதமரின் பயணத்தில் இம்முறை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய வம்சாவளியினரின் கலை கலாச்சார உறவு, கல்வி, வணிகம், ஆள் தருவிப்பு உள்ளிட்ட விஷயங்களில் விக்னேஸ்வரன் கருத்துகளை முன்வைப்பார் என நம்பப்படுகிறது.