புது டெல்லி, ஆகஸ்ட் -22, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்தியப் பயணம், 800 கோடி ரிங்கிட் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.
அதே சமயம் 450 கோடி ரிங்கிட் முதலீட்டையும் வெற்றிகரமாக ஈர்த்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
செம்பனை எண்ணெய், இராசயணப் பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, விமான உபரிப்பாகங்கள் ஆகியவற்றை அந்த வர்த்தகக் கடப்பாடுகள் உட்படுத்தியுள்ளன.
அந்நாட்டின் பெருநிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்புகளின் வழி அது சாத்தியமானதாக, இந்தியாவுக்கான 3 நாள் அலுவல் பயணத்தின் கடைசி நாளில் அன்வார் மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமரின் அப்பயணத்தில் இரு நாட்டு அரசாங்களுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதே சமயம் மலேசிய – இந்திய நிறுவனங்களுக்கிடையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கடந்தாண்டு இரு நாட்டு வர்த்த மதிப்பு 7,231 கோடி ரிங்கிட்டாக இருந்தது.
இவ்வாண்டு மார்ச் வரையில் 168 முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றின் வாயிலாக 16,640 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
3 நாள் பயணத்தில் இந்தியா குறிப்பாக அதன் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக நடத்தியாகக் கூறிய அன்வார், உறவு தொடர மலேசியாவுக்கு வருமாறு மோடிக்கும் அழைப்பு விடுத்து வந்துள்ளார்.