
புத்ராஜெயா, செப் 14 – சீனாவுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இரண்டாவது பயணம் மலேசியாவிற்கு மற்றொரு சுற்று முதலீடுகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி கூறியிருக்கிறார். நாட்டின் சிறந்த வர்த்தக பங்காளிகளில் ஒரு நாடாக சீனா விளங்கும் கடப்பாட்டை பிரதமரின் வருகை பிரதிபலிக்கிறது என்பதோடு அன்வாருக்கும் சீனத் தலைமைத்துவத்திற்குமிடையே இருந்துவரும் நல்லுறவைவும் அது பிரதிபலிக்கிறது என்று ரபிசி ரம்லி தெரிவித்தார்.
“இந்தப் பயணம் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையில் அதிக ஒத்துழைப்பைக் காண உதவும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் மலேசிய மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையே நிறைய முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும் என அவர் கூறினார். சீனா-ஆசியான் எக்ஸ்போ (CAEXPO) மற்றும் சீனா-ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அன்வார் ஞாயிற்றுக்கிழமை நன்னிங் நகரில் இருப்பார். மார்ச் மாதம் அவர் மேற்கொண்ட முதல் வருகையினால் , சீனாவிடமிருந்து 170 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடு கடப்பாடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. சீனாவிற்கும் மலேசியாவிற்குமிடையே பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் 19 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.