இஸ்லாமாபாத், அக்டோபர்-4 – பாகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, பொது மக்களுக்கு வழங்கப்படும் அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பாகிஸ்தான் அதிபர் அசிஃப் அலி சர்தாரி (Asif Ali Zardari) Nishan-e-Pakistan எனும் அந்த உயரிய விருதை அன்வாருக்கு வழங்கினார்.
பிரதமரின் தலைமைத்துவம் மற்றும் மலேசிய-பாகிஸ்தான் இரு வழி உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் காட்டி வரும் அக்கறையை அங்கீகரிக்கும் வகையில் அவ்விருது வழங்கப்பட்டது.
3 நாள் பயணமாக பிரதமர் அந்த தெற்காசிய நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அன்வாரின் அலுவல் பயணத்தை (working visit) பாகிஸ்தான் அரசாங்கம் முன்னதாக அரசு முறைப் பயணமாக (state visit) தரமுயர்த்தி கௌரவப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
1957-ஆம் ஆண்டு முதல் மலேசியாவுடன் தூதரக உறவைகொண்டுள்ள பாகிஸ்தான், 2016-ஆம் ஆண்டிலிருந்து தெற்காசியாவில் மலேசியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்து வருகிறது.