கோலாலம்பூர், மே 4 – இந்திய சமூகத்திற்காக மித்ரா மற்றும் இதர அமைப்புகளின் வாயிலாக வழங்கப்படும் ஒதுக்கீடுகள் பற்றி அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்திருந்தார்.
இதனிடையே, இந்த கூற்றை சில தரப்பினர் தவறான கண்ணோட்டத்தில் இந்திய சமூகத்தினரை அவர் ஒதுக்கி வைப்பதாக அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
மக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் இந்த அணுகுமுறையை அத்தரப்பினர் கண்டிப்பாக கைவிட வேண்டும் என தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணையமச்சர் டத்தோ ரமணன் கடிந்து கொண்டார்.
இதனிடையே, நேற்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் கூட்டுறவுக் கழகத்தின் 11ஆவது ஆண்டுக்கூட்டத்தில் தலைமையேற்ற டத்தோ ரமணன், தேசிய கூட்டுறவு ஆணையத்தின் நிதி சுழல் குறித்து இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்குத் தெரியவுமில்லை, விழிப்புணர்வுமில்லை என குறிப்பிட்டார்.
தேசிய கூட்டுறவு ஆணையத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 200 மில்லியன் ரிங்கிட் சுழல் நிதியாக ஒதுக்கப்படுகிறது.
அதில், நாட்டில் செயல்படுகின்ற 352 இந்தியக் கூட்டுறவுக் கழகங்களில் வெறும் 25 கூட்டுறவுக் கழகங்கள் மட்டும், இதுவரை 33 மில்லியன் ரிங்கிடை பயன்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தில் பல திட்டங்களை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்கள் குறித்தும் அடிக்கடி அறிவிப்புகள் செய்யப்படும் நிலையில், தேவைப்படுவோர் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
மேலும், தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் வாயிலாக நேற்று கோப்ரிமாஸ் கூட்டுறவு கழகத்திற்கு 1 லட்சம் மானியமும் வழங்கப்படுவதாக டத்தோ ரமணன் அறிவித்தார்.
இம்மானியம் பொருளாதார மேம்பாட்டிற்கு முதலீட்டாளர்கள், பெரிய நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், வணிகத்தை விரிவுப்படுத்த உறுப்பினர்களுக்குப் பயனளிக்கவும் ஒரு சிறந்த வழியாகும் என்றும் அவர் விளக்கினார்.