
கோலாலம்பூர், செப் 13 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சிங்கப்பூருக்கு வருகை புரிவார் என வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும் அவரது துணைவியாரும் அன்வாரையும் அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலையும் வரவேற்பார்கள். இன்று மாலையில் சிங்கப்பூர் பிரதமர் தம்பதியருடன் அன்வாரும் டாக்டர் வான் அஸிஸாவும் தேநீர் விருந்து உபசரிப்பில் கலந்துகொள்வர். ஆசிய ‘Miken’ அமைப்பின் உச்சநிலைக் கூட்டத்தில் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் உரையாற்றவிருக்கிறார். அன்வாருடன் முதலீடு, வர்த்தக தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜமாரி அப்துல் காதிர் ஆகியோரும் சிங்கப்பூருக்கு செல்வர் என பெர்னாமா தகவல் வெளியிட்டது.