மும்பை, பிப் 6 – தனது தேனிசைக் குரலால் ரசிகர்களை லயிக்க வைத்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் 92-வது வயதில் காலமானார்.
கோவிட் தொற்றின் காரணாமாக கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதல், மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடக்கத்தில் சிக்கிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைத்து வந்த நிலையில் , இன்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமாகியது. அதையடுத்து அவர் காலமான தகவலை அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார்.
இந்திய சினிமாவில் சிறந்த பின்னணிப் பாடகியாக திகழ்ந்த லதா மங்கேஷ்கர் 1942-இல் தனது 13-வது வயதில் இசை வாழக்கையைத் தொடங்கினார். இவர் இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 30,000 -கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாஹேப் பால்கே உட்பட பல உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
பல்வேறு மறக்க முடியாத கானங்களுக்கு சொந்தக்காரரான இவர் இந்தியாவின் ‘மெலடி குயின் ‘ என்று ரசிகர்களாலும் போற்றப்பட்டார்.
தமிழில் இவர் சத்யா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை’ பாடலையும், என் ஜீவன் பாடுது எனும் திரைப்படத்தில் ஒளியேறிய ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலையும் பாடியிருந்தார்.