
சென்னை, பிப் 4 பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று சென்னை நூங்கம்பாக்காத்தில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் மரணம் அடைந்தார். 78 வயதுடைய அவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் ,கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 10,000த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான மூன்று தேசிய விருதுகளையும் தமிழகம், ஆந்திரா போன்ற மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
தீர்க்க சுமங்கலி படத்தில், கவிஞர் வாலி எழுதிய மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல்தான் தமிழில் வாணி ஜெயராம் பாடி முதல் பாடலாகும். இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் அவர் பாடிய அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் சின்ன சின்ன ஆசைகள் படத்தில் மேகமே மேகமே, வைதேகி காத்திருந்தாள் படத்தில் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே , ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே , கவிதை கேளுங்கள் கருவில் போன்ற பிரபலப் பாடல்களும் அவருக்கு பெரும் ரசிகர்களை பெற்றுத் தந்தது. அண்மையில் இந்திய குடியரசு தினத்தின்போது வாணி ஜெயராமிற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. வீட்டில் தவறி விழுந்ததால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.