
பெய்ஜிங், ஜன 31 – சீனாவில், நிறுவனம் ஒன்று மேடையில், 90 லட்சம் டாலர் பணத்தை, பிரமிட் மலை போன்று அடுக்கி வைத்து, பின்னர் போனசாக அந்த பணத்தை தனது சிறந்த பணியாளர்களுக்கு பகிர்ந்த காணொளி பலரது கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
சீனா உட்பட உலகம் முழுவதிலும் 5,100-கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட Henan Mine எனப்படும் அந்த நிறுவனம் கடந்தாண்டு 136 கோடி டாலர் வருமானத்தைப் பதிவு செய்தது.
அதையடுத்து, தனது ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் போனசை அறிவித்த நிலையில், சிலர் தங்களுக்கு ரொக்கமாக வழங்கப்பட்ட பணத்தை கையில் தூக்கிச் செல்ல கூட முடியாமல் தடுமாறியதையும் அந்த காணொளியில் காண முடிந்தது.
இதனிடையே, இந்த காணொளி குறித்து கருத்துரைத்த சமூக வலைத்தளவாசிகள் , வங்கியிலிருந்து பணத்தை எடுத்து, அதை பெற்றுக் கொண்ட நபர் மீண்டும் அந்த பணத்தை வங்கிக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். பிறகு ஏன் இப்படியொரு ஆர்ப்பாட்டம் . இந்த வர்த்தக கலாச்சாரம் தங்களுக்கு பிடிக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.