Latestமலேசியா

இந்து சமயத்தை தரக் குறைவாக பேசிவரும் ஷம்ரி வினோத் உட்பட சமய போதனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சட்டத்துறை அலுவலகத்தில் மகஜர் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், ஏப் 2 – இந்து சமயம் உட்பட சமயங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் செய்துவரும் ஷம்ரி வினோத் ,பிரடவுஸ் வோங் உட்பட சில சமய போதகர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் அரசு சார்ப்பற்ற இயக்கங்கள் சார்பில் நேற்று மகஜர் வழங்கப்பட்டது. நாட்டின் சமய நல்லிணக்கத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிற சமயங்களுக்கு எதிராக பொறுப்பற்ற சமய போதர்கள் மேற்கொண்டுவரும் இத்தகைய தவறான பிரச்சார நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என Global Human rights Federation அமைப்பின் தலைவரான S. ShasiKumar வலியுறுத்தினார். தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நேற்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சசிக்குமார் தலைமையில் இந்த மகஜர் வழங்கப்பட்டது. மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் , சபா, சரவா மற்றும் சீன சமூகத்தை பிரதிநிதிக்கும் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் சித்தி காசிம் , கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கணபதி ராவ் உட்பட அரசு சார்பற்ற இயக்கத்தை சேர்ந்த பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மற்ற சமயங்களை சிறுமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தவறான பிரச்சாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என சசிக்குமார் கேட்டுக் கொண்டார். சட்டத்துறை அலுவலகத்தின் பொது உறவு அதிகாரியான Wan Amirah ரிடம் இது தொடர்பான மகஜரை சசிக்குமார் வழங்கினார். இந்து சமயம் உட்பட சிறுபான்மை சமயங்களை சிறுமைப்படுத்தும் நடவடிக்கையில் முஸ்லிம் சமயத்தை தழுவிய ஸம்ரி வினோத் உட்பட முஸ்லிம் சமய போதனையாளர்கள் சிலர் மேற்கொண்டுவரும் தவறான பிரச்சாரங்கள் குறித்து ஏற்கனவே பல முறை போலீசில் புகார் செய்தும் அதனை தடுப்பதற்கு எந்தவொரு நடவடிகையும் எடுக்கப்படவில்லை என சசிக்குமார் தமது ஏமாற்றத்தை தெரிவித்தார்.

ஏற்கனவே அவர்களுக்கு எதிராக அரசு சார்பற்ற இயக்கங்கள் செய்த புகார்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ஷம்ரி வினோத் , பிரடவுஸ் வோங் போன்றவர்கள் தொடர்ந்து முகநூலிலும் சொற்பொழிவு நிகழ்வுகளிலும் மற்ற சமயங்கள் குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மகஜர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவர் தங்க கணேசன் கேட்டுக்கொண்டார்.

நாட்டிலுள்ள பல இன மக்களிடையே இருந்துவரும் சமய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் கடமையும் கடப்பாடும் அரசாங்கத்திற்கு இருப்பதால் மற்ற சமயங்களை சிறுமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் மட்டுமின்றி அரசு சார்ப்பற்ற இயக்கங்களை சேர்ந்த பலரும் கோரிக்கை விடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!