புது டெல்லி, ஆகஸ்ட் -21, பிரிக்ஸ் (BRICKS) அமைப்பில் இணைவதன் மூலம் மலேசியா தனது பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்த முடியுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பகிரப்பட்ட முன்னெடுப்புகள் மற்றும் விவேகப் பங்காளித்துவத்தின் மூலம் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்துப் பணியாற்றுவதன் மூலம் அது சாத்தியமாகும் என்றார் அவர்.
2009-ல் உருவாகிய பிரிக்ஸ் நாடுகள் அமைப்பில் இணைவதற்கு மலேசியா விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவ்வமைப்பின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் செல்வாக்கு, மலேசியாவின் விண்ணப்பத்திற்கு பெரிதும் உதவும்.
அதோடு இந்தியா – மலேசியா இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி, புதிய வாய்ப்புகளுக்கும் ஒத்துழைப்புக்கும் வழி வகுக்கும் என பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அலுவல் பயணமாகச் சென்றுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார், அங்கு நடைபெற்ற பொருளாதார ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவ்வாறு சொன்னார்.
வேகமாக வளர்ந்து பெரும் பொருளாதாரங்களான பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் பெற்றுள்ளன.
இவ்வாண்டு ஜனவரியில் ஈரான், எகிப்து, ஜக்கிய அரபு சிற்றரசு, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர்களாக இணைந்தன.
மலேசியாவும் அதிலிணையும் விருப்பத்தை ஜூன் மாதம் பிரேசிலிடம் தெரியப்படுத்தியது.