புத்ராஜெயா, ஆகஸ்ட் -5, பிரிட்டனில் வசிக்கும் அல்லது அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், அங்கு ஆர்பாட்டங்கள் நடைபெற்று வரும் பகுதிகளை விட்டு தள்ளியே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஜூலை 29-ல் சவுத்போர்ட் (Southport) நகரில் கத்திக் குத்து தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளதால், வெளியுறவு அமைச்சு (Wisma Putra) அவ்வாறு அறிவுறுத்தியது.
அங்கிருக்கும் போது எந்நேரமும் கவனமாகவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடக்க வேண்டும்.
லண்டனில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தில் இன்னும் பதிந்துக் கொள்ளாமலிருக்கும் மலேசியர்கள் விரைந்து அவ்வாறு செய்திட வேண்டும்.
சரியான தகவல்களும் உதவிகளும் உரிய நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்திட அது அவசியமென விஸ்மா புத்ரா கூறியது.
லண்டலில் உள்ள உயர் ஆணையத்தின் வாயிலாக அங்குள்ள நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வரும் அமைச்சு, ஆகக்கடைசி தகவல்களை அவ்வப்போது பொது மக்களுக்கு வழங்கி வருமென்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
இதனால் சனிக்கிழமை பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலச்சாரி ஆர்ப்பாட்டங்கள் வெடித்து அவை கலவரமாக மாறியுள்ளன.
இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.