லண்டன், பிப் 20 – பிரிட்டனின் இரண்டாம் எலிசெபத் அரசியாருக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதாக, பகிங்காம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
95 வயதை எட்டியிருக்கும் எலிசெபத் அரசியார் இவ்வாண்டுடன் அரியணை அமர்ந்து 70 -ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அரசியாருக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதாகவும், லேசான அறிகுறிகளே அவரிடம் தென்படுவதாகவும், எளிய அரசப் பணிகளை அவர் தொடர்ந்து கவனிப்பார் எனவும் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
அரசியாரும், மறைந்த அவரது கணவர் இளவரசர் ஃபிலிப்பும் , 2021 ஜனவரியில் முதல் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக மட்டுமே இதற்கு முன்பு உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும் , மருத்துவ ரகசியம் என சுட்டிக் காட்டி, தொடர்ந்து அவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என்ற விபரத்தை வெளியிட அரண்மனை மறுத்தது.
இதனிடையே, மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் , எலிசெபத் அரசியார் கடந்தாண்டு இறுதி தொடங்கி அதிகம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததை அடுத்து, அவரது உடல் நலம் குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.
அதுவும், அண்மையில் அவரது புதல்வர் இளவரசர் சார்ல்ஸும், இளவரசர் சார்ல்ஸின் துணைவியர் கமிலாவும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த சில தினங்களாக அரசியாரின் உடல் நிலை குறித்து பலருக்கு கவலையும் எழுந்திருந்தது.