லண்டன், டிசம்பர்-21,பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மேற்கொண்டு வரும் புற்றுநோய் சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, பக்கிங்ஹம் (Buckingham) அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே அடுத்தாண்டும் சிகிச்சைத் தொடரும்; மற்றபடி அவரின் உடல் நிலையில் கவலைப்படும்படியான பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாயார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு 2022-ல் அரியணையேறிய 76 வயது சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை, கடந்த பிப்ரவரியில் அரண்மனை உறுதிப்படுத்தியது.
புரோஸ்டேட் (prostate) வீக்கத்திற்காக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட போது அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது.
ஆனால் என்ன புற்றுநோய் என்பது அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து ஓய்விலிருந்தவர் ஏப்ரல் மாதம் அரசப் பணிகளுக்குத் திரும்பினார்.
பொது நிகழ்ச்சிகளில் அவர் மீண்டும் பங்கேற்கத் தொடங்கினாலும், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி அட்டவணைகள் தீவிரமாக கண்காணித்து வரப்பட்டன.
இந்நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டதிலிருந்து முதல் வெளிநாட்டுப் பயணமாக சார்ல்ஸ் மற்றும் துணைவியார் கமீலா இருவரும் அக்டோபரில் ஆஸ்திரேலியா, சாமோவா (Samoa) நாடுகளுக்குப் பயணமாகினர்.
லண்டன் திரும்பும் வழியில் அரசத் தம்பதி தனிப்பட்ட முறையில் இந்தியா, பெங்களூருவில் உள்ள ஆரோக்கிய மையத்தில் சில நாட்கள் தங்கி, சார்ல்ஸ் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.