பத்து பஹாட், ஏப்ரல் 18 – ஜோகூர், பத்து பஹாட்டிற்கு அருகில், ஜாலான் குளுவாங் – டான் ஸ்வீ ஹோ சாலை சமிக்சை விளக்கு சந்திப்பில், 11 வாகனங்களை பேருந்து ஒன்று மோதித் தள்ளியதற்கு, அதன் பிரேக்கில் ஏற்பட்ட கோளாரே காரணம் என கூறப்படுகிறது.
இன்று காலை மணி 10.30 வாக்கில், அவ்விபத்து நிகழ்ந்தது. பத்து பஹாட்டிலிருந்து ஜாலான் குளுவாங் நோக்கி பயணமான போது, அப்பேருந்து, விபத்தில் சிக்கியதாக, பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
சாலை சமிக்சையை சென்றடைந்த பேருந்து, பிரேக் பிடிக்காததால், அங்கு நின்றுக் கொண்டிருந்த இரு லோரிகளையும், எட்டு கார்களையும் மோதித் தள்ளியது.
எனினும், அவ்விபத்தில் யாரும் கடுமையான காயங்களுக்கு இலக்காகவில்லை. வாகனங்கள் மட்டுமே மோசமாக சேதமடைந்ததாக டோல்லா சொன்னார்.
விபத்துக்குள்ளான பேருந்து, பத்து பஹாட் தொழிற்பயிற்சி கல்லூரியின், 26 ஆண்டுகள் பழைமையான பேருந்து என கூறப்படுகிறது.
அவ்விபத்து தொடர்பில், 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.