கோலாலம்பூர், பிப் 24 – நாட்டில் இன மற்றும் சமய விவகாரங்களை பிரச்சனையாக்கும் உண்மையான தரப்பினர் மீது போலிஸ் விசாரணை நடத்த வேண்டும என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
வயது குறைந்த பிள்ளைகளைத் தாயுடன் சேர்க்க போராடுவது இந்நாட்டில் ஒரு குற்றமாகாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.
தாய் லோ தம் மூன்று பிள்ளைகளோடு சேர்க்கப்பட வேண்டும் என தாம் வெளியிட்ட கருத்து தொடர்பில் போலீஸ் தம்மை விசாரிக்க உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பிள்ளைகள் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்திருப்பதற்கு ஆதாரம் இருந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தாம் முன்னர் பதிவிட்டிருந்ததாக அவர் கூறினார்.
தாம் குறிப்பிட்ட அம்சங்கள் எப்படி பிறருக்கு பாதிப்பையும், இனவாதத்தை தூண்டியிருப்பதாகவும் அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது என்று தமக்கு தெரியவில்லையென டாக்டர் ராமசாமி தெரிவித்தார். எப்படியிருந்தபோதிலும் விசாரணை நடத்தும் உரிமை போலீசிற்கு உள்ளது. நான் எதனையும் மூடி மறைக்க வேண்டியதில்லை.
அதே வேளையில் பெர்லீஸ் சமயத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் மேலும் சிலரும் என் மீதும் என் சகாக்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு எதிராக விசாரணை செய்யும் போலீஸ் அந்த புகார்களையும் மறந்துவிடக்கூடாது என்றும் டாக்டர் ராமசாமி கேட்டுக் கொண்டார்.